சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: விமான இருக்கையிலிருந்து 22.5 லட்சம் தங்கம் மீட்பு: கடத்தல் ஆசாமி மாயம்

சென்னை: சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. மீண்டும் அந்த விமானம் காலை 10.30 மணிக்கு ரியாத்துக்கு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறங்கியதும் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு இருக்கையில் உள்ள குசைன் சீட் சற்று உயர்வாக இருந்தது. ஊழியர்கள் சரி செய்ய முயன்றனர். அதில் சிவப்புக்கலர் பார்சல் இருந்தது. உடனே விமான ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு மேலாளாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பார்சலில் வெடிகுண்டு ஏதாவது இருக்குமோ? என்று சந்தேகம் வந்தது. விமான நிலைய மேலாளர் அவசரமாக தகவல் கொடுத்தார்.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏறிசிவப்புக்கலர் பார்சலை சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. உலோகப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.  விமான நிலைய சுங்க அதிகாரிகள் விரைந்து வந்து பார்சலை பிரித்து பார்த்தபோது புத்தம் புதிய தங்க நகைகள் இருந்தன. அதில் 27 தங்க நெக்லஸ்கள், 53 தங்க தோடுகள் இருந்தன. அதன் எடை 585 கிராம். அதன் சர்வதேச மதிப்பு 22.5 லட்சம். சுங்க அதிகாரிகள் அந்த பார்சலை கைப்பற்றினர். விமானத்தின் உள் பகுதி, பயணிகள் வருகை பகுதி குடியுரிமை சுங்க சோதனை பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையில் தங்க நகைகள் ரியாத்தில் இருந்து கடத்தி வந்த கடத்தல் ஆசாமி சென்னை விமான நிலையத்தில் சுங்க சோதனை நடப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. எனவே கடத்தல் ஆசாமி விமானத்தில் இருக்கும்போது, தீவிரமாக சோதனை நடைபெறுகிறது என்று எச்சரித்த ஆசாமியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: