×

லூப் சாலையில் நடைபாதைக்கு அனுமதி கோரி மாநகராட்சி மனு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நடைபாதை அமைப்பதற்கு அனுமதி கோரிய மாநகராட்சியின் மனுவுக்கு 6 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மீனவர் நல அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது மெரினா கடற்கரை பகுதியில் உள்ள மீன் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி மெரினாவில் 27.04 கோடி செலவில் 900 நடைபாதை கடைகளும், கலங்கரை விளக்கம் அருகில் 66 லட்சம் சார்பில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைத்து மெரினா கடற்கரை ஒழுங்குபடுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் செயலர் அனுமதி மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் செயலரான டாக்டர் ஜெயந்தி நேரில் ஆஜராகினார். அவர், லூப் சாலையில் நடைபாதை அமைப்பது தொடர்பான மாநகராட்சியின் விண்ணப்பம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார். இதேபோல் மாநகராட்சி தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, மெரினாவில் நடைபாதை கடைகளுக்கான வாடகையை நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், டெண்டரை இறுதி செய்வது தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என கோரினார்.

அதையடுத்து நீதிபதிகள், மெரினாவை உலகத்தரமிக்க கடற்கரையாக மாற்றுவதே எங்களின் நோக்கம் என்றும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தனர். மேலும் லூப் சாலையில் நடைபாதை அமைப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் 6 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர். மேலும் மீன்பிடி தடை காலத்தின்போது மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகையை அதிகரிக்கக் கோரி தொடரப்பட்ட பிரதான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் பிப்.4க்கு தள்ளி வைத்தனர்.

Tags : loop road Loop road , Loop Road, Corporation, Federal Government, High Court
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...