×

கடந்த ஆண்டு 3.28 கோடி பேர் பயணித்த நிலையில் மெட்ரோ ரயிலில் 6.08 கோடி பேர் பயணம்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: கடந்த ஆண்டு 3.28 கோடி பேர் பயணம் செய்த நிலையில் மெட்ரோ ரயிலில் இதுவரை 6.08 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி முதல் சென்னையில் துவங்கியது. இதுவரை சென்னையில் உள்ள மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. மேலும் இணைப்புப் போக்குவரத்து வசதிகளும், வாகன நிறுத்துமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தற்போது சில மெட்ரோ ரயில் நிலையங்களில் இயங்கி வரும் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி மற்றும் மெட்ரோ சீருந்து இணைப்பு சேவைகள் விரைவில் அனைத்து 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை மெட்ேரா ரயில் சேவைகள் துவங்கியது முதல் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 26,33,890, 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 36,30,216 பயணிகளும், 2017ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 73,99,282 பேர், 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை 1,43,88,969 பேர் என 2,80,52,357 பேர் பயணம் செய்துள்ளனர். அதைப்போன்று 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 3,28,13,628 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை மெட்ரோவில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி முதல் 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 6,08,65,985 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 நாட்கள், செப்டம்பர் 21 நாட்கள், அக்டோபர் 22 நாட்கள், நவம்பர் 24 நாட்கள், டிசம்பர் 26 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்ட செயலாக்கத்தை தொழில்துறை அமைச்சர் எம்.பி சம்பத் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு செய்தார். மேலும் மெட்ரோ ரயில் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், இணைப்பு சேவை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல், இயக்குநர்கள் சுஜாதா ஜெயராஜ் (நிதி), ராஜீவ் நாராயணன் திவேதி ( திட்டங்கள்), நரசிம்பிரசாத் ( இயக்கம் மற்றும் அமைப்புகள்), தலைமை பொதுமேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags : passengers ,Metro , Metro Rail, Administration
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...