ஆயிரம்விளக்கு பகுதியில் வெடி குண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் அரசு ஊழியர் கைது

சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ஆயிரம்விளக்கு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநில கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த அறைக்கு ேநற்று முன்தினம் நள்ளிரவு அழைப்பு  ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், ஆயிரம் விளக்கு பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே சம்பவம் குறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்திற்கு பேசிய நபரின் செல்போன் எண்ணுடன் தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது திருவல்லிக்கேணி அஜிஸ்மூக் 2வது தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (60) என்பவருக்கு சொந்தமான செல்போன் நம்பர் என தெரியவந்தது. உடனே போலீசார் கிருஷ்ணமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரசு மருத்துவமனையில் ரேடியாலஜி பிரிவில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு சொந்த ஜாமீனில் எச்சரித்து விட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஆயிரம்விளக்கு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: