×

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 104 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மேலும், 104 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை தனது தொகுதியில் பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும், 68வது வார்டான மதுரைசாமி மடம் தெருவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இக்கட்டிட பணிக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 26.22 லட்சம் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதை தொடர்ந்து டீட்டி தோட்டம் முதல் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கூடுதல் அறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதற்காக அவர் 19.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

64வது வார்டான திருவீதியம்மன் கோயில் குளம் மேம்படுத்தும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதற்காக சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து 35.26 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அஞ்சுகம் நகரில் பூங்கா மேம்பாடு, அரிதாஸ் தெருவில் தாமரைக்குளம் தடுப்புவேலி பணி, ஜவஹர் நகர் பகுதி உடற்பயிற்சி கூடத்துக்கு உபகரணங்கள் வழங்குதல், அதே பகுதியில் உள்விளையாட்டு அரங்க பழுதுபார்ப்பு பணிகள் உள்ளிட்டவற்றை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், தனது சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் 104 பேருக்கு மூக்கு கண்ணாடி மற்றும் புத்தாடைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், ரத்த தானம் செய்த 124 பேருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிகளில் வடசென்னை நாடாளுமன்ற எம்பி கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தேவஜவஹர் உள்பட பலர் உடனிருந்தனர்.


Tags : Colombo Legislative Assembly ,MK Stalin The Colombo Legislative Assembly ,MK Stalin , Kolathur Assembly Constituency, Welfare Program Assistance, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...