×

சோழிங்கநல்லூர் சிக்னலில் பரபரப்பு: டிப்பர் லாரி மோதி ஐ.டி ஊழியர் பலி: டிரைவர் கைது

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் சிக்னலில் பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் ஆந்திராவை சேர்ந்த ஐ.டி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் வேணுபாபு (32). சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர், சிறுசேரியில் வீடு வாடகைக்கு எடுத்து, தனது மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வேணுபாபு பணி முடிந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். சோழிங்கநல்லூர் சிக்னலில் வேணுபாபு பைக்குடன் காத்திருந்தார். அப்போது இவருக்கு பின்னால் ஒரு கார் நின்றிருந்தது. அதற்கு பின்னால் வந்த ஒரு டிப்பர் லாரி வேகமாக சிக்னலை கடந்தபோது காரின் மீது மோதியது.

இதனால் அந்த கார் வேணுபாபுவின் பைக் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் வேணுபாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேணுபாபுவின் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய மதுராந்தகம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் சங்கர் (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : IT employee , Sholinganallur, IT employee killed, driver arrested
× RELATED திருமணமான 3 மாதத்தில் ஐ.டி ஊழியர்