புழல் பகுதியில் சிசிடிவி கேமரா அமைத்து பெருமாள் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல், சிவராஜ் தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது.  இந்த கோயிலுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் குளம் இருந்தது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கை, கால்களை கழுவி விட்டு கோயிலுக்கு செல்லவும், அங்கிருந்து படிக்கட்டுகளில் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுக்கவும் முன்னோர்கள் கோயில் குளத்தை அமைத்தனர். நாளடைவில் இந்த குளம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டதால் செடி, கொடிகள் படர்ந்து தூர்ந்துபோனது. இந்த குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீர் சேமித்து கரைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கேட்பாரற்று கிடந்த இந்த கோயில் குளத்தை கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிலர் மண்போட்டு மூடி வீட்டு மனைகளாக பிரிக்க முயற்சி செய்தனர். பின்னர், போலீசார் வந்து எச்சரிக்கை பலகை வைத்து சென்றனர்.  இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக மீண்டும் அங்கு தனியார் சிலர் வந்து கண்காணிப்பு கேமரா, எல்லைக்கல் ஆகியவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக கோயில் நிலத்தை மற்றும் குளத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக இந்து அறநிலைத்துறை நிர்வாக செயல் அலுவலர் குமரேசன், மாதவரம் வருவாய்த்துறை தாசில்தார் சரவணன் ஆகியோரிடம் புகாரளித்தனர்.

அதன்படி நேற்று மதியம் 1 மணியளவில் நிர்வாக செயல் அலுவலர் குமரேசன், தாசில்தார் சரவணன், சர்வேயர் சங்கர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விஜயன் மற்றும் கிராம பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கரியமாணிக்க பெருமாள் கோயில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  பின்னர், அப்பகுதி மக்களை அழைத்து, ‘‘இது கோயிலுக்கு சொந்தமான இடம். இந்த இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனவும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அங்குள்ள எல்லைக்கல், சிசிடிவி கேமராக்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: