அரசு போட்டி தேர்வு தேர்வுகளை எதிர்கொள்ள புதிய இணையதளம் தொடக்கம்: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வே.விஷ்ணு வெளியிட்ட அறிவிப்பு:

அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கும் நோக்கில் மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வ பயிலும் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகி தன்னார்வ பயிலும் வட்டத்தின் சேவைகளைப் பெற இயலாதர்களும், தொலைதூர கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களும், இருந்த இடத்தில் இருந்தே போட்டி தேர்வுகளுக்குத் தயார் செய்ய விரும்பும் பிற மாணவர்களும் பயன்பெறுவதற்கென தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் மெய்நிகர் கற்றல் வலைதளம்( (https://tamilnaducareersrvices.tn.gov.in/) ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்விணையதளத்தில் போட்டித்தேர்வுகளுக்கென, அந்தந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தின் தலைப்புகள் வாரியாக மென்பாடக்குறிப்புகள் பதிவேற்றப்பட்டு உள்ளன. பாடக்குறிப்புகள் தொடர்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொளி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இது தவிர இவ்வலைதளத்தை அலைபேசி வாயிலாகப் பயன்படுத்துவதற்கென ஒரு அலைபேசி செயலியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயலியை https://tamilnaducareersrvices.tn.gov.in தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகளை அலைபேசியிலேயே பதிவுதாரர்கள் படிக்க இயலும். எனவே அரசுத்துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள் அனைவரும் இவ்விணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து இவ்வலைதளத்தின் சேவைகளை இலவசமாகப் பெற்று பயனடையலாம்.

Related Stories: