நட்சத்திர ஓட்டல் கடற்கரை ஒழுங்கு மண்டல விதிமீறலா? கலெக்டர், மாசுகட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.தியாகராஜன். மீனவர் நலச்சங்க தலைவர். இவர், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டி சர்வதேச ஓட்டல் நிறுவனம் ஒன்று கடற்கரை இடத்தை ஆக்கிரமித்து கடற்கரை ஒழுங்கு மண்டல விதிகளுக்கு புறம்பாக நட்சத்திர ஓட்டல் கட்டி வருகிறது. நட்சத்திர ஓட்டல் அருகே சுனாமி குடியிருப்பு உள்ளது. கழிவுநீரை சுத்திகரித்து அப்புறப்படுத்த ஓட்டல் நிர்வாகம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கடற்கரையில் கழிவுநீர் திறந்து விடப்படும் பட்சத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டு சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படுவர்.

மேலும், குடிநீர் பற்றாக்குறை மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே, நட்சத்திர ஓட்டல் கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும்என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மனுதாரரின் புகார் குறித்து செங்கல்பட்டு கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் நேரில் சென்று நட்சத்திர ஓட்டல் கடற்கரை ஒழுங்கு மண்டல விதிகளுக்கு புறம்பாக கட்டப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: