ரூ.5 கோடி இயந்திரத்தை ரூ.1.57 கோடிக்கு விற்க முயற்சி சட்டவிரோதமாக விடப்பட்ட டெண்டர் தற்காலிகமாக நிறுத்தம்: விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு

சென்னை: ரூ.5 கோடி மதிப்புள்ள இயந்திரத்தை ரூ.1.48 கோடிக்கு விற்க முயற்சி செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக விடப்பட்ட டெண்டரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பு இயக்கக அங்கமான பணிமனை மற்றும் பண்டகசாலை அலுவலகம் சென்னை தங்கச்சாலையில் உள்ள மிண்ட்டில் உள்ளது. இந்த பண்டகசாலையில் மதகுகள் தயாரிப்பதற்கென பல நூறு கோடி செலவில் வாங்கப்பட்ட இயந்திரங்கள் பயன்படாமல் உள்ளதால், அந்த இயந்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த இயந்திரங்கள் ரூ.1.48 கோடி செலவில் டெண்டர் மற்றும் ஏலம் விடப்படும் என்று நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. ஆனால், விதிமுறைப்படி ஏலம் விடப்பட்ட பிறகுதான் டெண்டர் திறக்க வேண்டும் என்று ஒப்பந்த நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக கண்காணிப்பு பொறியாளர் அப்பாஸ் மந்திரியை முற்றுகையிட்டனர். இதையடுத்து, அவர் டெண்டரை ரத்து செய்த நிலையில் பிப்.12ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால், திடீரென நேற்று முன்தினம் மாலை போலீஸ் பாதுகாப்புடன் டெண்டர் திறக்கப்பட்டது. இதில், 9 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதில், ரூ.1.57 கோடிக்கு அதிகபட்சமாக டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் விடப்பட்ட இயந்திரத்தின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்ற நிலையில் ரூ.1.50 கோடிக்கு அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து சட்டவிரோதமாக விடப்பட்ட டெண்டரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, நேற்று மாலை பொதுப்பணித்துறை பதிவு பெற்ற 20க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் அணைகள் பாதுகாப்பு இயக்கக செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டனர். அப்போது, அவர்கள் டெண்டர் ரத்து செய்து விட்ட நிலையில், நாங்கள் சென்ற பிறகு டெண்டர் விட்டது ஏன் என்றும்  கேள்வி எழுப்பினார்கள். அதற்கு செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், இது தொடர்பாக பொதுப்பணித்துறை உயர் அதிகாரியுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கான்ட்ராக்டர்களிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

Related Stories: