ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம் சிபிஐ.யை வழக்கில் சேர்க்க கோரிய திமுக மனு ஏற்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த விவகாரம் தொடர்பான வழக்கில் சிபிஐயை சேர்க்க அனுமதியளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது, ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017ம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலின் போது, அதிமுக சார்பில் டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, அபிராமபுரம் காவல் நிலையம் பதிவு செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்திருந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் வைரக்கண்ணனும், பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வேட்பாளர் மருது கணேஷும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

ஏற்கனவே, இந்த வழக்கு விசாரணையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் புதிதாக புகார் அளிக்க  தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த வழக்கில் சிபிஐயை இணைக்க எந்த ஆட்சேபமும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், அபிராமபுரம் காவல் ஆய்வாளர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பணப்பட்டுவாடா புகார் குறித்து 828 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் பணப்பட்டுவாடா புகாரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது என தெரிவித்தார். திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், பணப்பட்டுவாடா புகாரில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தேர்தல் அதிகாரிகள் புதிதாக புகார் அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இந்திய தேர்தல் ஆணையம், வருமான வரித்துறையை சார்ந்து இருப்பது தவறு என்றும், வருமான வரித்துறை அறிக்கைக்காக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தையும் மோசடி செய்யும் செயல் எனவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து, பணப்பட்டுவாடா குறித்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் வகையில், சிபிஐ.யை இணைத்து மனுவில் திருத்தம் செய்ய அனுமதி கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், இந்த வழக்கில் சிபிஐ.யை எதிர்மனுதாரராக சேர்த்து சிபிஐ விசாரணை கோருவதற்கு, மனுவில் திருத்தம் செய்வது தொடர்பான மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. ஆனால் அதேநேரம் அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் செலவழித்த தொகையை இழப்பீடாக வழங்கக்கோரும் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளனர். மனுவில் திருத்தம் செய்வது தொடர்பான மனுதாரரின் கோரிக்கை

ஏற்கப்படுகிறது. ஆனால் அதேநேரம் அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் செலவழித்த தொகையை இழப்பீடாக வழங்க கோரும் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: