வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் பராமரிப்பாளர் புலி கடித்து காயம்

சென்னை: கூடுவாஞ்சேரி, அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் (62). இவரது மனைவி விஜயா (58). இருவரும், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பணிபுரிகின்றனர். பூங்காவில் புலி குட்டிகளை பராமரிக்கும் பணிகளை விஜயா செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தன்று காலை சுமார் 9.45 மணியளவில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நடிகர் அஜித்குமாரின் மனைவி நடிகை ஷாலினி அவரது மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் சிலர் சுற்றிப் பார்க்க வந்தனர். அவர்களை பூங்கா அதிகாரிகள் பேட்டரி காரில் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது வங்கப் புலியை பார்ப்பதற்காக சென்ற அவர்கள், அங்கிருந்த ரித்திக் என்ற ஒன்றரை வயது புலிக்குட்டியை கண்டு ரசித்தனர். புலி குட்டியின் அருகே பூங்கா மருத்துவர் மற்றும் பராமரிப்பாளர் விஜயா இருந்தனர். புலி குட்டியை ரசித்தவர்கள் கேமராவில் படம் பிடிக்க முயன்றபோது கேமரா பிளாஷ் லைட் புலி மீது பட்டதாக தெரிகிறது. உடனே, மிரண்டு போன புலி அருகிலிருந்த பராமரிப்பாளர் விஜயாவின் வலது கையில் கடித்துள்ளது. இதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கீழே விழுந்த விஜயாவை பூங்கா ஊழியர்கள் மீட்டு, மேலக்கோட்டையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஐந்துக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு பின்னர் அன்று இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீட்டுக்கு சென்ற பின்னர் மீண்டும் கையில் வலி அதிகரித்ததுடன் தலை சுத்தல், மயக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் கடந்த திங்கட்கிழமை மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவமனையில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். விஜயாவை கடித்த புலி குட்டிக்கு சில மாதங்களுக்கு முன்பு ரித்திக் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், “புலி குட்டிகளைப் பராமரிக்கும் பணிகளை விஜயா செய்து வருகிறார். இந்த விபத்து எதிர்பாராமல் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது. விஜயாவின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு தனியார் மருத்துவமனை மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு விலங்குகளை பராமரிக்கும்போது போதிய முன்னெச்சரிக்கையுடன் பணியாற்ற விலங்குகள் பராமரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜயாவுக்கு சிறிதளவில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது” என்றனர்.

Related Stories: