பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1000 - ரூ.5000 வரை உதவித்தொகை: தொழிலாளர் நலவாரிய கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 78வது கூட்டம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தலைமையில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தையற்பயிற்சி பயிலும் தொழிலாளர்களை சார்ந்தோருக்கு தையல் இயந்திரம் பரிசு வழங்குதல், பள்ளிகளில் பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகள் பயன்பெறும் விதமாக கல்வி உதவித்தொகையாக பிரிகேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.2,000, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகையாக வழங்கலாம் என்றும், விளையாட்டுத் திறன் மிக்க தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் மாவட்ட அளவிலான உள்விளையாட்டு,

வெளி விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள தகுதிபெறும் மாணவர்களுக்கு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ரூ.3000, ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.5000 விளையாட்டு உதவித்தொகையும், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் எழுதும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்குதல், போன்ற புதிய நலத் திட்டங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டது. இதுபோல, தமிழ்நாடு தொழிலாளர் நல நிதியை இணையதளத்தின் வாயிலாக செலுத்துவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கென இணையதளத்தை அமைச்சரும், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் தலைவருமான நிலோபர் கபில் துவக்கி வைத்தார். தொடர்ச்சியாக சென்னை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள ஜீவா இல்லம், இணைப்பு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, தொழிற்சங்க மகளிர் தங்குவதற்கான விடுதியை அமைச்சர் நிலோபர் கபில் திறந்து வைத்தார்.

Related Stories: