கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க சீனாவுக்கு பறக்க இருக்கும் மதுரை ‘என்95 முகக்கவசம்’ அங்கிகளும் முழுவீச்சில் தயாரிப்பு

மதுரை: சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதில் இருந்து தப்புவதற்கான என் 95 வகை முகக்கவசம், அங்கி உள்ளிட்டவைகளின் தேவை அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் இருந்தும் சீனாவிற்கு முகக்கவசம், அங்கி உள்ளிட்டவைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்தும் இந்த முகக்கவசம், அங்கி உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் மிக வேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. மதுரை நரிமேடு பகுதியில் இந்த வகை பொருட்களை 150க்கும் அதிக ஊழியர்கள், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தயாரித்து வருகின்றனர். சுவாசிக்கும்போது நுண்கிருமிகள் பரவாமல் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் மிகக்கவனமாக தயாராகிறது. தேவை கருதி மூலப்பொருட்களின் விலை உயர்வால், தற்போது 60 சதவீதம் விலை உயர்ந்திருக்கிறது.   

இந்த முகக்கவசம் 3 அடுக்கு முதல் 6 அடுக்கு வரையிலான ‘பில்டர்’ கொண்டிருக்கிறது. முதல் அடுக்கிலும் கடைசி அடுக்கிலும் ‘ஸ்பன்பாண்ட்’ என்ற பொருளும், நடு அடுக்கில் ‘மெல்ட்ப்ளோன்’ என்ற பொருளும் பயன்படுத்தப்பட்டிருப்பதால், முழுமையாக நுண்கிருமிகள் பரவுதலை தடுக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இவை பாக்டீரியா உள்ளிட்ட எவ்வகை கிருமிகளும் உள்ளே புக விடாமல் தடுத்து விடும். அதேபோல் பிரத்யேக மருத்துவ பாதுகாப்பு ‘கவுன்’ உள்ளிட்ட ஆடைகளும் இங்கு தயாரித்து சென்னை அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த ஆடை நோயாளிகளிடம் இருந்து டாக்டர், நர்ஸ்களை காப்பதுடன், நோயாளிக்கும் பாதுகாப்பு தரும் விதமாக இருக்கிறது. முகக்கவசம் மற்றும் அங்கிகள் முழுக்க முழுக்க சுத்திகரிப்பு செய்து, கிருமிகளின்றி மிகுந்த எச்சரிக்கையோடு தயாராகிறது. இதுகுறித்து மதுரை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அபிலாஷ் கூறும்போது, ‘‘சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் முகக்கவசம், அங்கி உள்ளிட்டவைகளின் தேவை அதிகரித்துள்ளது. இவை சீனாவிற்கு தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அங்கிகளின் துணி மிகவும் நெருக்கமாக பின்னப்பட்டிருக்கும். இந்த அங்கிகள் தயாரிப்பதற்கு நூல் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கான தனி இழை, ‘அல்ட்ரோசோனிக்’ முறையில் சூடாக்கி மெல்ட் செய்து, தையலிடப்படுகிறது’’ என்றார்.

Related Stories: