×

சோலார் மின்சார திட்டத்தை எதிர்த்து உடுமலையில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்தகடவு கிராமத்திற்கு  அருகில் தனியார் நிறுவனம் 300 ஏக்கர் பரப்பளவில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு செல்ல விவசாயிகளின் அனுமதி இல்லாமால் பி.ஏ.பி. பாசனதிட்ட குழாய்களை உடைத்தும், விவசாய நிலங்கள் வழியாகவும் மின்கம்பங்கள் அமைத்து கொண்டு செல்கின்றனர். மேலும்  நீர்வழிப்பாதைகளை அடைத்தும், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்லுகின்ற பாதைகள், ஓடைகள் ஆகியவற்றின் நடுவில் பாதையை மறைத்தும் கொண்டு சென்றனர். விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக தனியார் நிறுவனம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. உடன்பாடு முடியாத நிலையில், தனியார் நிறுவனம் நேற்று பணிகளை துவக்கினர்.

இதையறிந்த விவசாயிகள் அங்கு சென்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மகேஷ்குமார் என்ற விவசாயி போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு காயம் அடைந்தார். அவர் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் காவல் துறையை கண்டித்து கனகராஜ் என்ற விவசாயி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Udumalai , Solar, electricity project, resist, Udumalai, farmer, fire, try
× RELATED அரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்