×

தேர்தல் நிதி பத்திரத்தில் முறைகேடு பிரதமரின் தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘தேர்தல் நிதி பத்திரம் விற்பனையில் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும்,’ என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதி திரட்டுவதற்காக தேர்தல் நிதி பத்திரம் என்ற முறையை மத்திய அரசு ஏற்படுத்தியது. இதன்படி, பாரத ஸ்டேட் வங்கிகளில் விற்பனை செய்யப்படும் இந்த பத்திரத்தை பெற்று தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் நன்கொடை வழங்கலாம். தேர்தலின் போது கருப்பு பண புழக்கத்தை தடுப்பதற்காக இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் உதவும் என்று பாஜ தெரிவித்திருந்தது.

பத்திரம் மூலம் நிதி திரட்டும் இந்த முறைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ஆளும் பாஜ.வுக்கு ரூ.6,128 கோடி கிடைத்துள்ளது. இது மொத்த நன்கொடையில் 95 சதவீதமாகும். இது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பாஜ.வுக்கு ரூ.6,128 கோடி கிடைத்துள்ளது. இந்த திட்டத்துக்கு ரிசர்வ் வங்கியும், தேர்தல் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு அதை அலட்சியப்படுத்தி இருக்கிறது. எனவே, தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டதில் பிரதமரின் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஊடகங்கள் மவுனம் காப்பதேன்? விவாதம் செய்யாதது ஏன்?’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Congress , Election Finance, Scandal, Prime Minister, Communication, Inquiry, Congress, Emphasis
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...