நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்: இன்னொரு குற்றவாளி புதிய மனு

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியானதுதான் என்று கூறி, அவரது மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் (32), ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். ஆனால் அதை கடந்த 17ம் தேதி ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து முகேஷ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertising
Advertising

இந்த மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் ஏற்றது. நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போபண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில், கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்தது சரியல்ல. அவரது முடிவில்  நடைமுறை குறைபாடுகள், அரசியல் சட்ட விதிமுறைகள் மீறல் உள்ளது’’ என்று குறிப்பிட்டார். ஆனால் இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் வெளியிட்ட தீர்ப்பில், ‘‘முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியானதுதான்.

மேலும், ஜனாதிபதியின் உத்தரவு உச்சபட்ச அதிகாரம் என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று கூறி முகேஷ் குமார் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதற்கிடையே, நிர்பயா வழக்கின் மற்றொரு குற்றவாளியான அக்சய் குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதேபோல், மற்றொரு குற்றவாளி வினய் குமார் சர்மா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று கருணை மனு அனுப்பி உள்ளார். குற்றவாளிகள் தூக்கு தண்டனைய தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: