கேரள சட்டப்பேரவையில் பரபரப்பு கவர்னருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளி: எதிர்ப்புக்கு பணிந்து சிஏஏ வாசகத்தை படித்தார் ஆளுநர்

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கானை எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் தடுத்து நிறுத்தி அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் பெறுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. கவர்னர் ஆரிப் முகமது கானை முதல்வர் பினராய்  விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், சட்ட அமைச்சர் ஏ.கே.பாலன் ஆகியோர் சபைக்குள் அழைத்து வந்தனர். அப்போது திடீரென ‘‘கோ பேக் கவர்னர், ரீ கால் கவர்னர்’’ என்று எழுதப்பட்ட பேனர்களுடன் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  

அப்போது கூப்பிய கைகளுடன் கவர்னர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். எதிர்க்கட்சியினர் கலைந்து செல்லாமல் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். நேரம் செல்லச் செல்ல பதற்றம் அதிகரித்தது. பின்னர் முதல்வர் பினராய் விஜயன், சபாநாயகர் காதில் ஏதா கிசுகிசுத்தார். இதையடுத்து சபாநாயகர் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். சபை காவலர்கள் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை குண்டுகட்டாக அப்புறப்படுத்தினர். இதன்பிறகு சபை காவலர்கள் கவர்னரை பாதுகாப்பு வளையம் அமைத்து இருக்கைக்கு அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 8 நிமிடங்கள் கவர்னர் சபையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

காலை 9 மணியளவில் கவர்னர் ஆரிப் முகமது கான் தனது உரையை வாசித்தார். அப்போது குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்கிவிட்டு சட்டத்துக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய 18வது பாராவையும் சேர்த்தே அவர் வாசித்தார். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தலைமையில் சட்டப்பேரவைக்கு வெளியேயும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மோடிக்கும் முதல்வருக்கும் ரகசிய ஒப்பந்தம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியதாவது: பிரதமர் மோடிக்கும், முதல்வர் பினராய் விஜயனுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் கவர்னர் தனக்கு எதிர்ப்பு உள்ளது என்று  கூறி உரையை வாசித்தார். பினராய் விஜயனுக்கு எதிராக லாவ்லின் ஊழல் வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது. இதில் சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பாஜ அரசுக்கு முதல்வர் பணிந்து போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.  

* டிஜிட்டல் மயமாகிறது
கேரள சட்டப்பேரவையின் அனைத்து பணிகளும் காகித நடவடிக்கையில் இருந்து வந்தது. காகித  பயன்பாட்டை குறைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நேற்றைய பட்ஜெட்  கூட்டத் தொடர் முதல், படிப்படியாக சட்டப்பேரவை நடவடிக்கைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றது. இதற்காக அனைத்து உறுப்பினர்களின் இருக்கைகளிலும் கம்ப்யூட்டர் டிஸ்பிளேக்கள் வைக்கப்பட்டுள்ளன. டச் ஸ்கிரீன் மூலம் செயல்படும் இந்த டிஸ்ப்பிளேக்களில் உறுப்பினர்களின் ஆஜர், சபை நடவடிக்கைகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம். சபாநாயகரிடம் கேள்வி கேட்க வேண்டுமென்றால் கையை உயர்த்தவோ, எழுந்து நிற்கவோ வேண்டாம். அதிலேயே  சாட்டிங் வசதி உள்ளது. அதன் மூலம் உறுப்பினர்கள் சபாநாயகருடன் தகவலை பகிர்ந்து கொள்ளலாம். மேலும், நேற்று கவர்னர் உரையாற்றியபோது, அவர் படித்த ஒவ்வொரு பக்கமும், அவர் முடித்தவுடன் உறுப்பினர்கள் திரையில் தெரிந்தது.

* பாதுகாப்பு அதிகரிப்பு
கேரள கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கு எதிராக போராட்டம் அதிரிப்பதை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. நேற்று முதல் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Opposition parties ,governor ,Kerala , Kerala Legislative Assembly, Broadcasting, Governor, Opposition, Opposition
× RELATED சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்துக்கு...