போபால் விஷவாயு வழக்கில் கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் மனு பிப்.11ல் விசாரணை

புதுடெல்லி: போபால் விஷவாயு கசிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை வருகிற 11ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் அமெரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலையில் கடந்த 1984ம் ஆண்டு விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 3000 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு 1989ம் ஆண்டு ரூ.715 கோடி இழப்பீடு தொகையை இந்நிறுவனம் வழங்கியது.

Advertising
Advertising

தற்போது, இந்த தொழிற்சாலையை டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில், விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகளால் அவதிக்குள்ளாகி வருவதால், அவர்களுக்கு மருத்துவ செலவுக்கு கூடுதலாக ரூ.7,844 கோடி வழங்க அமெரிக்க நிறுவனத்துக்கு உத்தரவிடக்கோரி மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி எஸ் ரவீந்தரா பாட் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

விஷவாயு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டபோது மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞராக தான் ஆஜரானதாகவும், எனவே தன்னை வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து இம்மனு நேற்று விசாரணை க்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிப்ரவரி 11ம் தேதி இந்த மனுவை விசாரிப்பதாக தெரிவித்தனர். நேற்று ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “சபரிமலை வழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கம் தொடர்பான மனுக்கள் விசாரணையில் இருப்பதால், பிப்ரவரி 11ம் தேதி போபால் விஷவாயு மனுவை விசாரிப்பது சாத்தியமில்லை,” என்று வாதிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, “மனுவின் தன்மை கருத்தில் கொள்ளப்படும், மற்ற வழக்குகள் விசாரணையை கருத்தில் கொண்டு, இந்த மனுவை விசாரிப்பதற்கான தேதி நிர்ணயிக்கப்படும்,” என்றனர்.

Related Stories: