வன்முறையை தூண்ட ரூ.120 கோடி பரிமாற்றமா? அமலாக்கத்துறை சம்மனுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம்: கேரள அமைப்பு, என்ஜிஓ கேட்டன

புதுடெல்லி: வன்முறையை தூண்ட ரூ.120 கோடி பணபரிமாற்றம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க கோரிய அமலாக்கத் துறையிடம் கேரள அமைப்பும், என்ஜிஓ.வும் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளன. கேரளாவை சேர்ந்த அமைப்பு ஒன்றின் மீது கடந்த 2018ம் ஆண்டு பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்  நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறையை தூண்ட, ரூ.120 கோடியை கேரள அமைப்பின் வங்கி கணக்கில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கேரள அமைப்பு மறுத்தது. மேலும், கேரள அமைப்புக்கும், தன்னார்வ அமைப்புக்கும் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதில், இரு அமைப்பின் நிர்வாகிகளும் நேற்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதன்படி, நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் கேரள அமைப்பின் சட்டம் சார்ந்த நிர்வாகி, தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி உள்பட 4 பேர் ஆஜராகினர். பின்னர், இது தொடர்பாக கேரள அமைப்பின் நிர்வாகி கூறுகையில், ‘‘நாங்கள் வழக்கு தொடர்பாக ஆஜராகவில்லை. சம்மனுக்கு விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டுள்ளோம்,’’ என்றார்.

Related Stories: