2012ல் வினாத்தாள் வெளியான அடுத்த நிமிடமே குரூப் 2 தேர்வு ரத்து குரூப் 4ல் இவ்வளவு முறைகேடு நடந்தும் தேர்வை ரத்து செய்ய தயங்குவது ஏன்?

*விடைத்தாள் திருத்தும்போது சீல் வைத்த பண்டலை சரிபார்க்காத பின்னணி என்ன?

* தேர்வு எழுதியவர்கள் அடுக்கடுக்கான கேள்வி

சென்னை: 2012ல் வினாத்தாள் வெளியான அடுத்த நிமிடமே குரூப் 2 தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. குரூப் 4 தேர்வில் இவ்வளவு முறைகேடு நடந்தும் தேர்வை ரத்து செய்ய தயங்குவது ஏன் என்றும், விடைத்தாளை திருத்தும் போது சீல் வைத்த பண்டலை சரிபார்க்காததன் பின்னணி என்ன என்றும் தேர்வு எழுதியவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஆகஸ்ட் 12ம் தேதி குரூப் 2 தேர்வை நடத்தியது. சுமார் 3687 பதவிகளுக்கு இந்த தேர்வு நடந்தது. தேர்வுக்கு 6.5 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். தேர்வு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு, தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் விடைத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. அந்த விடைத்தாளை பயன்படுத்தி நிறைய பேர் தேர்வு எழுதியதாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அப்போதைய டிஎன்பிஎஸ்சி செயலாளர் உதயச்சந்திரன் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை நடத்தி மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை அளித்தனர்.

அதில் வினாத்தாள் வெளியானது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, குரூப் 2 தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. குரூப் 2 தேர்வு என்பது சாதாரண பணி கிடையாது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் 2வது உயர் பதவிக்கான தேர்வாகும். இதில் தொழில் கூட்டுறவு அதிகாரி, சமூக பாதுகாப்பு துறை அதிகாரி, வேலை வாய்ப்புத்துறை இளநிலை அதிகாரி, சிறைத்துறை பயிற்சி அதிகாரி, சப்-ரிஜிஸ்திரார் (கிரேடு 2)- நகராட்சி ஆணையர் (கிரேடு 2) உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகள் அடங்கும். அப்படிப்பட்ட இந்த தேர்வே வினாத்தாள் வெளியானதும் ரத்து செய்யப்பட்டது.

அப்படியிருக்கும் போது, தற்போது குரூப் 4 தேர்வு முறைகேடு ஒட்டுமொத்த தமிழகத்தையை உலுக்கியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக தினந்தோறும் புதுப்புது தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு வரும் தகவல் இப்படியும் முறைகேடு நடந்திருக்குமா என்று ஒவ்வொருவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் கீழ் நிலையில் உள்ள அரசு ஊழியர்கள்தான் சிக்கி வருகின்றனர். அவர்கள் இந்த அளவுக்கு முறைகேடு  செய்திருப்பார்களா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர்களுக்கு பின்னால், இருப்பவர்களை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள்கள் தேர்வு கண்காணிப்பாளர், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் என்று கையெழுத்து வைப்பது வழக்கம். அதன்பிறகுதான் விடைத்தாள் சீல் வைக்கப்படும். மேலும், எந்த மாவட்டத்தில் தேர்வு நடந்தாலும் தேர்வுக்கு பிறகு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன்தான் அந்த விடைத்தாள்கள் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்படும். அதாவது, அருகில் உள்ள மாவட்டம் என்றால் அன்றே விடைத்தாள் சென்னைக்கு கொண்டுவரப்படும். தொலைதூரத்தில் உள்ள மாவட்டம் என்றால் தேர்வு நடந்த மறுநாள் காலையில் சென்னைக்கு கொண்டுவரப்படும்.

ஆனால், தற்போது வழியிலேயே முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி நடந்திருந்தால், விடைத்தாள்களை திருத்தும் போது முதலில் போட்ட சீல் ஒழுங்காக இருக்கிறதா, பண்டலில் ஏதாவது உடைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது வழக்கம். இந்த விதிகளை விடைத்தாள் திருத்தும் போது அதிகாரிகள் ஏன் சரிபார்க்கவில்லை. அப்போதே அவர்கள் இதை கண்டுபிடித்து இருந்தால் இந்த அளவுக்கு பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்காது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இவ்வளவு முறைகேடு நடந்த பிறகும் குரூப் 4 தேர்வை ரத்து செய்யாமல் இருப்பதன் பின்னணி என்ன என்றும் தேர்வு எழுதியவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: