குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை இனிமேல் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் 100% நேர்மையாக நடக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகத்தில் குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, இனிமேல் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் 100 சதவீதம் நேர்மையாக நடக்கும் என்றார். தமிழகத்தில் கடந்த 2019 செப்டம்பர் மாதம் 9,398 இடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய அனைவரும் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். 50க்கும் மேற்பட்டவர்கள் விசாரணை வளைத்துக்குள் உள்ளனர். இந்த முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பல்வேறு புரோக்கர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த முறைகேடு காரணமாக, பல ஆண்டு காலமாக அரசு பணியில் சேர வேண்டும் என்று படித்து நேர்மையாக தேர்வு எழுதியவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த முறைகேடு ஒருபுறம் விசாரணையில் இருக்கும்போது, 2017ம் ஆண்டு முதல் நடந்த குரூப் 2 உள்ளிட்ட அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ள தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலமாக குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில மையத்தில் மட்டும் முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அரசும், தேர்வாணையமும் காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க கூடாது என்பதற்காக அரசு உறுதியாக உள்ளது. தமிழகம் முழுவதும் 16 லட்சம் பேர் 6,300 சென்டரில் தேர்வு எழுதினார்கள். ஒரு மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. எதிர்காலத்தில் 100 சதவீதம் முறைகேடுகள் இல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அந்த அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும்.

தற்போது குருப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. குரூப் 4 தேர்வையே ரத்து செய்வது என்பது சரியான நடைமுறையாகாது.

* தி.நகர் பயிற்சி மையத்தில் குரூப் 1 தேர்வில் முறைகேடா?

ஒடிசாவில் புற்றீசல் மாதிரி வந்த பயிற்சி மையங்களை தடுக்க ஒரு சட்டம்  கொண்டு வந்தனர். அதை ஒரு முன்மாதிரியாக வைத்து, தமிழகத்திலும் ஒரு சட்டம்  கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது. அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட 6 விஷயங்கள் இருந்தால் அந்த சென்டருக்கு அனுமதி கொடுக்கப்படும். இதுபற்றி சட்ட மசோதா வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தவறு செய்தார்களா என்று கேட்கிறீர்கள். எந்த அதிகாரி தவறு செய்தார் என்று தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயிலில் தள்ளுவோம். குரூப் 1 தேர்வின்போது தி.நகரில் உள்ள ஒரு சென்டரில் படித்த 150 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி  விசாரணை நடக்குமா என்று கேட்கிறீர்கள். முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எதையும் ஒதுக்கி வைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Related Stories: