பிப்ரவரி 1ம் தேதி முதல் 7ம்தேதி வரை 12வது பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி: கவர்னர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில நேரு யுவகேந்திரா சங்கதன் இயக்குனர் எம்.என்.நடராஜன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் உள்துறை அமைச்கத்தின் உதவியுடன் நேரு யுவகேந்திரா இளைஞர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு செயல்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதில் ஒன்று தான், பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி. இதன் மூலம் ஒரு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களை மற்றொரு மாநிலத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள கலாச்சாரம், பண்பாடு, உணவு முறை, பழக்கவழக்கம் போன்றவற்றை அறிந்து கொள்ள செய்வது.கடந்த 11 ஆண்டுகளாக இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது 12வது ஆண்டாக சென்னையில் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடக்கிறது. சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் கொண்ட 20 குழுக்களை சேர்ந்தவர்கள் பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அதில், சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் பாதிக்கப்பட்ட தந்தேவாடா, பஸ்வடா, பாலூட் உட்பட 4 மாவட்ட பகுதிகளை  சேர்ந்த 15 முதல் 29 வயது உடைய 59 பெண்கள் உள்பட 200 பழங்குடியின இளைஞர்கள் சென்னையில் நடைபெறும் பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை 1ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை அடையாறில் உள்ள இளைஞர் விடுதியில் தொடங்கி வைக்கிறார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பழங்குடியின இளைஞர்களுடன் கலந்து கொள்கின்றனர்.நிறைவு நாளான 7ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சிஆர்பிஎப் டிஐஜி சோனல் வி.மிஸ்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

Related Stories: