48 மணிநேர தங்கு தொழிலுக்கு அனுமதி: சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்களும் கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். மற்ற இடங்களில் விசைப்படகு மீனவர்கள் 45 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் அதிகாலை மீன்பிடிக்க சென்று இரவில் கரை திரும்பிவிட வேண்டும் என விதி உள்ளது. இதனால் விசைப்படகுகள் ஆழ்கடலில் வெகுதூரம் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை உள்ளது. அதோடு அதிக செலவு ஏற்பட்டு குறைந்த லாபம் மட்டுமே மீனவர்களுக்கு கிடைத்து வருகிறது. மேலும் கரையை ஒட்டிய பகுதிகளில் விசைப்படகுகள் மீன்பிடிக்க வேண்டிய நிலை உள்ளதால், நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சின்னமுட்டம் மீனவர்களுக்கும், நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதி மீனவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் கலவரம் ஏற்படும் வகையில் நிலைமை சென்றது. ஆனால் இரு மாவட்ட நிர்வாகங்களும் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை குறைத்தன. இந்த பிரச்னை தொடர்பாக சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கூறுகையில், ‘கரையை ஒட்டிய பகுதிகளில் நாங்கள் மீன்பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. இதனால் பிரச்னைகளும் உருவாகி பதற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. விசைப்படகுகள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்தால் எங்களுக்கு லாபம் கிடைக்கும். தேவையற்ற பிரச்னைகளும் ஏற்படாது. எனவே எங்களை ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.

ஆனால் விசைப்படகு மீனவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு நாட்டுப்படகு மீனவர்களும் ஆதரவு அளித்தனர். ‘விசைப்படகுகள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்தால் அவர்களுக்கும் ஏராளம் மீன் கிடைக்கும். கரையோரமாக மீன்பிடிக்கும் எங்களுக்கும் இடைஞ்சல் இன்றி எங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்’ என நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் என காலம் நீண்டுகொண்டு சென்றது. இதையடுத்து மீன்வளத்துறை சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கு ஒரு சிறப்பு உத்தரவை வழங்கி உள்ளது. அதில் விசைப்படகு மீனவர்கள் 48 மணிநேரம் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் சின்னமுட்டம் விசைப்படகுகள் இன்று 12 மணிக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டு சென்றன. இதற்காக காலையில் இருந்தே மீனவர்கள் ஐஸ், டீசல், வலை உள்ளிட்ட மீன்பிடி தொழிலுக்கு தேவையான பொருட்களை சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு வாகனங்களில் எடுத்து சென்று தங்கள் விசைப்படகுகளில் ஏற்றினர். இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இன்று காலையில் இருந்தே பரபரப்பாக காணப்பட்டது.

Tags : sea ,fishermen , Permits: Little fishermen set out to sea
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு...