ரூ.80 கோடி செலவில் கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்தும் திட்டம்: முதற்கட்ட ஆய்வு பணி துவங்கியது

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியை ரூ.80 கோடி செலவில் அழகுபடுத்துவதற்கான திட்ட வரைவு ஆய்வு பணிகள் துவங்கின. கொடைக்கானலின் இதயமாகவும், நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியானது சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது. மற்ற சுற்றுலா தலங்களில் இதேபோல் ஏரிகள் இருந்தாலும் இந்த நட்சத்திர ஏரியை காணத்தான் அதிகளவில் வருகின்றனர். நகரின் மத்தியில் உள்ளதால் மாலை வரை ஏரியில் படகுசவாரி முடிந்தாலும் இரவில் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள்- டூவீலர் ரைய்டிங் செல்வதும், ஜாலியாக உலா வருவதும் என தனிச்சிறப்பு வாய்ந்த ஏரியாக இது கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க ஏரியை மேம்படுத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ரூ.80 கோடி நிதி அறிவித்தார்.

ஆனால் அத்திட்டம் இதுவரை செயல்படாத நிலையில் உள்ளது. எனவே இத்திட்டத்தில் ஏரியில் சாலையை உயர்த்துதல், புதிய வேலிகள் அமைத்தல், புதிய நடைபாதை அமைத்தல், உயர்தர மின்விளக்குகள் அமைத்தல், ஏரிச்சாலையில் பேட்டரி கார் இயக்குதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் நாராயணன் கூறியதாவது, ‘கொடைக்கானல் ஏரியை மேம்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. தனியார் கன்சல்டன்சி மூலம் ஏரியை மேம்படுத்துவதற்காக திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து அரசின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் ஏரி மேம்பாட்டு பணிகள் துவங்கும்’ என்றார்.

Related Stories: