பாளை கேடிசி நகர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் வேகமாக கடக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்: போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா?

கே.டி.சி. நகர்: பாளை கேடிசி நகர் மேம்பாலம் கீழ்ப் பகுதியில் அதிவேகமாக கடந்துசெல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் அவதிப்படும் மக்கள் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா? என எதிர்பார்க்கின்றனர். நெல்லை மாநகரில் பெருகிவரும் வாகனங்களுக்கேற்ப சாலை வசதி இல்லாததாலும், விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாலும் அன்றாடம் விபத்து நடப்பது வழக்கமாகி விட்டது. குறிப்பாக மதுஅருந்தியும், ஹெல்மெட் அணியாமலும் வாகனம் ஓட்டுவது விபத்துக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இதைத் தவிர்ப்பதற்காக சோதனை நடத்தும் போலீசார், விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதித்தும் இந்நிலை மாறவில்லை. இதனிடையே நெல்லை மாநகரில் விபத்துகளை குறைக்க  40 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க போலீசார் அரசுக்குப் பரிந்துரைந்துள்ளனர். ஆனால், தற்போது பாளை பஸ்நிலையம், மேலப்பாளையம் - அம்பை ரோடு தேவர் சிலை, அண்ணா சிலை ஆகிய 4 நான்கு இடங்களில் மட்டுமே சிக்னல்கள் இயங்கிவருகின்றன.

இதனிடையே பாளை கேடிசி நகர் நான்கு வழிச்சாலைச் சாலை பாலம் கீழ்ப்பகுதியில் நொடிக்கு நொடி ஏராளமான வாகனங்கள் அதிவேகத்தில் கடந்துசெல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. நெல்லை அடுத்த தாழையூத்து பகுதியில் இருந்து கேடிசி நகர் மேம்பாலம் இணைப்பு சாலை வழியாக திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. அதேவேளையில் பாளையில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி

செல்லும் வாகனங்களும் மேம்பாலத்தின் கீழ்பகுதி வழியாக நிற்காமல் செல்கின்றன. கேடிசி நகர் பகுதியில் இருந்துவரும் வாகனங்களும் பாலத்தின் கீழ்ப் பகுதியை கடக்கவேண்டியுள்ளது. இவ்வாறு விபத்து அபாயம் நிலவுவதால் அவதிப்படும் மக்கள், இதை தவிர்க்க இங்கு சிக்னல் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், இங்கு போதிய அளவுக்கு மின்விளக்கு வசதி செய்துதரப்படாத நிலையில் இரவில் இப்பகுதி இருள் மண்டிக் கிடக்கிறது. எனவே, தேவையான அளவுக்கு மின்வசதி செய்துதர கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனுமதிக்காக காத்திருப்பு

இதுகுறித்து பாளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கூறுகையில், ‘‘கேடிசி நகர் மேம்பாலம் கீழ்ப்பகுதி வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு  கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்கின்றன. எனவே, இங்கு விபத்துகளை தவிர்க்க சிக்னல் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளோம். இதே போல் நெல்லை மாநகரில் 40 இடங்களில் சிக்னல்கள் அமைக்க வேண்டியுள்ளது. வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, கொக்கிரகுளம், கேடிசி நகர், ஐகிரவுன்ட் ரவுண்டானா, மகாராஜா நகர், டவுன் ஆர்ச், டவுன் நயினார்குளம் ரோடு, வழுக்கோடை, தொண்டர் சன்னதி, அருணகிரி தியேட்டர், பேட்டை ரொட்டிக்கடை உள்ளிட்ட 40 இடங்களை தேர்வு செய்துள்ளோம். இதற்கான அனுமதி கிடைத்ததும் உடனடியாக சிக்னல்கள் அமைக்கப்படும்’’ என்றார்.

பராமரிப்பற்ற அவலம்

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த ஓராண்டுக்குமுன் நவீன சிக்னல் அமைக்கப்பட்டது. அதில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில்ஈடுபட்டு வாகனங்களில் கடந்து செல்வோரைகூட அடையாளம் காணக்கூடிய அளவில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ஆனால், முறையாகப் பராமரிக்கப்படாததால் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, இனியாவது நெல்லை மாநகரில் தேவையான இடங்களில் போக்குவரத்து சிக்னல்களை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Related Stories: