ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் தாக்கல்: 751 ஐரோப்பிய எம்.பி.க்களில் 626 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு

பெல்ஜியம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் கடந்த வாரம் 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 751 எம்.பி.க்களில் 560 பேரால் இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இது சட்டவிரோதமானது எனவும், உலக அளவில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் அவர்கள் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், 626 எம்.பி.க்கள் அடங்கிய 5 குழுக்கள் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டம் ஆகியவை இந்திய குடியுரிமை முறையில் அபாயகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனால் உலகிலேயே அதிக அகதிகளை கொண்ட நாடாக இந்தியா மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடும் மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக இந்திய அரசும், பாதுகாப்பு படையினரும் மக்களை மிரட்டி வருவதாகவும் தீர்மானத்தில் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது. போராட்டங்களின் போது மனித உரிமை மீறல் நடந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 751 எம்.பி.க்களில் 626 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் விரைவில் பெரும்பான்மையுடன் நிறைவேறும் என்று தெரிகிறது. மேலும், இந்த தீர்மானங்கள் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து இந்த தீர்மானங்கள் மீது நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: