3 ஆண்டுகளில் ரூ.23,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டி

சென்னை: 3 ஆண்டுகளில் ரூபாய் 23 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது பேசிய அமைச்சர், வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருவதாகவும், விவசாயத்துக்கு பயிர்க்கடன் தங்குதடையின்றி கொடுப்பதற்கு சுமார் 10 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, விவசாயிகளுக்கு போதிய அளவில் விவசாய கடன் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தமிழகத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை கொண்டு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார்.

முதல்வர் பழனிசாமி உழவர் பெருங்குடி மகனாக இருப்பதனால், விவசாயிகளின் நிலை அறிந்து பயிர் செய்வதில் உழவர்களுக்கு எந்தவித குறைகளும் ஏற்படாத வண்ணம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ரூபாய் 23 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது மிகப்பெரிய சாதனை எனவும் அமைச்சர் செல்லூர்ராஜூ குறிப்பிட்டுள்ளார்.  இதையடுத்து, குடிமராமத்து பணிகளுக்காக ரூபாய் 1000 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. நீர்நிலைகள் அனைத்தும் சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: