உலகின் மிகப் பெரியமலர் படுக்கை

நன்றி குங்குமம் தோழி

ஐக்கிய அரபு நாட்டின் துபாய் நகரில் ஷேக் சயீத் மசூதி மற்றும் புர்ஜி கலிபா அருகே 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் மிகப் பெரிய மலர் கார்பெட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த நவம்பர் 26ம் தேதி நடந்த இந்த சாதனை முயற்சியில் 150 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

சரியாக மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சாதனை முயற்சி ஒருமணி நேரத்தில்  முடிக்கப்பட்டது. 5426.65 சதுர மீட்டர் அளவுக்கு பல்வேறு மலர்களால் உருவாக்கப்பட்ட மலர் போர்வையை ஒரு மணி நேரத்தில் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

2 பெரிய கால்பந்து மைதானத்தை விட பெரியதாக இந்த கார்பெட் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்தியாவின் பெங்களூர் மற்றும் கென்யா ஆகிய இடங்களில்  இருந்து 50 டன் மலர்கள் கொண்டு வரப்பட்டன. இதில் பெங்களூருவில் இருந்து மட்டுமே 41444 கிலோ சாமந்தி பூ கொண்டு செல்லப்பட்டது.

‘‘9,290.30 சதுர மீட்டர் நீளத்துக்கு தான் மலர் படுக்கையினை அமைத்து சாதனைப் படைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்களால்  5426.65 சதுர மீட்டர் அளவுக்கு மட்டுமே மேற்கொள்ள முடிந்தது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 7 டன் மலர்கள் வாடிவிட்டதால் நாங்க நினைத்த அளவு மலர் படுக்கையினை எங்களால் அமைக்க முடியவில்லை. 2016ம் ஆண்டு இத்தாலியில் 3980.84 சதுர மீட்டர் அளவில் இதே போன்று சாதனை படைத்திருந்தனர்.

அந்த சாதனையை நாங்க முறியடித்துவிட்டோம்’’ என்றார் இந்த நிகழ்ச்சியின் பொது கன்வீனரான அனில் தேவ்கன். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கும் இந்த மலர் படுக்கைக்காகவே பெங்களூரூ மற்றும் அதன் அருகில் உள்ள தேவனஹள்ளி மற்றும் சிக்கபாலபூரா இடத்தில் இருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டது. இந்த சாதனை மலர் கார்பெட்டை 1 லட்சத்துக்கும்  அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். இதை பார்வையிடுவதற்காக 5 மீட்டர் உயரத்தில் 2 மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

அதில் ஏறி 360 டிகிரி கோணத்தில் அந்த கார்பெட்டை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ‘பொறுமைக்கான மலர்கள்’ (Flowers of Tolerance) என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மலர் கார்பெட்டுக்காக கொண்டு வரப்பட்ட மலர்கள் எல்லாம் வாடாமலும், நறுமணம் மாறாமல் இருக்கவும் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பத்தில் இவை வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தர்மல் ேபார்வைகள் மற்றும் டிரை ஐஸ் பயன்படுத்தப்பட்டு நிகழ்ச்சி வரை மலர்கள் மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு இருந்தன.

கோமதி பாஸ்கரன்

Related Stories: