×

முகம் மாறிய பாண்டிபஜார்

நன்றி குங்குமம் தோழி

சென்னை பெண்களுக்கு ஷாப்பிங் செய்ய பிடித்தமான இடம் என்றால் அது பாண்டிபஜார். அட, அந்த பழைய பாண்டி பஜாரை நினைத்து ஷாப்பிங் சென்றால் ஏமாந்துதான் போவோம். ஆம். இப்போது புதிதாய் அரிதாரம் பூசி புதுப் பொலிவோடும், வண்ண விளக்குகளோடும் காட்சி அளிக்கிறது.

வாகன நெரிசலில் சிக்கித் திணறும் பாண்டிபஜார் என்றதுமே நம் நினைவுகளுக்குள் வருவது நடைபாதைகளை ஆக்கிரமித்து நிற்கும் குட்டிக் குட்டிக் கடைகளும், சாலையோரம் நின்று கூவி அழைத்து விற்கும் வடநாட்டு இளைஞர்களும், பொருட்களை வாங்க அலை அலையாய் வரும் மக்கள் கூட்டமும்தான். குண்டூசியில் தொடங்கி சகலமும் இங்கே விற்பனையில். அதுவே பண்டிகை காலம் என்றால் கேட்கவே வேண்டாம்.

வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் சீர்மிகு நகரம் (smart city) திட்டத்தின் அடிப்படையில், சென்னையின் முக்கிய வர்த்தக தளமாக விளங்கும் தி.நகர் பாண்டிபஜாரில்  நவீன வசதிகளுடன் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி கடந்த வருடம் மே மாதம் தொடங்கப்பட்டது. இதில் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரையும், தணிகாசலம் சாலை முதல் போக்சாலை வரையும் பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

சாலையின் இருபுறமும் சுமார் 10 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகத்தில் மழைநீர் வடிகால், குடிநீர் மற்றும் வெளியே தெரியாத கழிவுநீர்க் குழாய்கள், மின்சார இணைப்பு வசதிகள் என முழுமையான சாலையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.  இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ள நடைபாதைகள், சாலையின் ஓரங்களில் அலங்கார விளக்குத் தூண்கள்.

சுவர்களில் கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள், சாலையோர மரங்களை ஹைலைட் செய்ய வண்ண வண்ண விளக்குகள், ஷாப்பிங் செய்துவிட்டு இளைப்பாற மர நிழலில் வண்ணமயமான இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சாலையோர பூந்தொட்டிகள், குறும்புக்கார குழந்தைகள் விளையாட ப்ளே ஏரியா, இளசுகளுக்கு ஸ்மார்ட் பைக் திட்டம், முதியவர்கள், குழந்தைகளோடு வரும் பெண்கள் வேண்டிய இடம் செல்ல இலவச பேட்டரி கார் (shuttle cars) வசதி, 45 நிமிடம் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஃப்ரீ வைஃபை ஜோன், அட்வான்ஸ் சிசிடிவி கேமராக்கள், மல்டி லெவல் பார்க்கிங் எனத் தன் தடத்தை மாற்றிக் கொண்டுள்ளது.

நீண்ட காலம் பாண்டிபஜாரில் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவரிடம் பேசியபோது, பாண்டி பஜாரை ரீ டிசைனிங் செய்ததில் மிகவும் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கிறது. நான் வியாபாரத்தை ஆரம்பித்த கடந்த 40 வருடத்தில் இவ்வளவு க்ளீனாக இந்த ஏரியாவைப் பார்த்ததில்லை. மக்கள் ரொம்பவே ப்ரீயாக சென்று பொருட்களை வாங்குகிறார்கள். இது எப்போதும் தொடரணும் இல்லையென்றால் பலனில்லை என முடித்தார்.

குடும்பத்தோடு ஷாப்பிங் வந்திருந்தவர்களை அணுகியபோது… சென்னையின் பிஸியான ஏரியாவில் ரிலாக்ஸ்டா நடக்கிறோம் என்பதே எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இருபுறம் நடந்து சென்று பொருட்களை வாங்கவும் வசதியாக உள்ளது.

கூடுதல் வசதியாக பேட்டரி கார்களும் இருப்பதால் தேவையான இடத்தில் ஏறி தேவையான கடை முன்னால் இறங்க முடிகிறது. ஷாப்பிங் ரொம்பவே சுலபமாக இருக்கிறது. பொதுமக்களும் சமூக அக்கறையுடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். இது இப்படியே தொடர வேண்டும் என்றனர்.

சென்னையின் பல பகுதிகள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் இருக்க, ஒரு புறம் விளம்புநிலை மக்களும், பூர்வகுடிகளான சென்னை வாசிகளும் ஒரே இரவில் வீடற்றவர்களாய் மாற்றப்பட்டு, ஒதுக்குப்புறங்களுக்கு துரத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆடம்பரம் தேவையா என்ற முனுமுனுப்புகளும் எழாமல் இல்லை.

மகேஸ்வரி

ஜி.சிவக்குமார்


Tags : Shopping, Bandipajar, Panagal Park
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்