×

குரூப்-2 தேர்வில் எஸ்.ஐ.யின் குடும்பமே தேர்ச்சி: விசாரணை நடத்த சிவகங்கை விரைந்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்!

சிவகங்கை: குரூப்-2 தேர்வில் எஸ்.ஐ.யின் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகங்கை விரைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தி 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்துள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி. அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், அரசு ஊழியர்கள், முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். ஆனால், இந்த வழக்கை சிபிசிஐடி வைத்து விசாரித்தால் உண்மை வெளியே வராது சிபிஐ விசாரணை வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஒரு இடைத்தரகராக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எஸ்.ஐ. ஈடுபட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகியிருந்தது.

அதுமட்டுமல்லாது எஸ்.ஐ.யின் மனைவி, எஸ்.ஐ.யின் இரண்டு தம்பிகள், எஸ்.ஐ தம்பியின் மனைவி என 4 பேர் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், புகாருக்கு ஆளான எஸ்.ஐ.யின் மனைவி குரூப் 2ஏ தேர்வில் மாநிலத்திலேயே 5வது இடம் மற்றும் எஸ்.ஐ.யின் தம்பி மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் சிபிசிஐடி போலீசாரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, சென்னையில் பணியாற்றி வரும் சிவகங்கையை சேர்ந்த எஸ்.ஐ சித்தாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த சிபிஐடி போலீசார், சிவகங்கைக்கு விரைந்துள்ளனர்.


Tags : Group-2 ,SI ,Sivaganga , DNBSC, Group 4, Group 2, Sivagangai, SI, CBCID
× RELATED குரூப் 2 மூன்றாம் கட்ட நேர்முக தேர்வு...