தமிழகத்தில் 240 புதிய பேருந்துகளின் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.84 கோடி செலவில் புதியதாக 240 பேருந்துகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். ரூ.600 மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.84 கோடி செலவில் வாங்கப்பட்ட புதிய 240 பேருந்துகளை, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்று முதல்வர் பழனிசாமி கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். இந்த புதிய பேருந்துகளில் 37 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவை ஆகும். இவை சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 103 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து திருச்சி மற்றும் தஞ்சை ஊரை மையமாக கொண்டு இயங்கக்கூடிய வகையில் ரூ.10 லட்சம் செலவில் வாங்கப்பட்ட இரண்டு அம்மா அரசு நடமாடும் பணிமுனை சேவையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: