×

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்..ஜெர்மனி, கனடா நாடுகளுக்கும் பரவியது: உலக முழுவதும் பரவும் அபாயம்!

பவேரியா: கொரோனா வைரஸ் கனடா மற்றும் ஜெர்மனியிலும் பரவியுள்ளதை அந்நாடுகள் உறுதி செய்துள்ளன. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 4,500க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், வுஹான் நகருக்கு மக்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாய்லாந்து (7), ஜப்பான் (3), தென் கொரியா (3), அமெரிக்கா (3), வியட்நாம் (2), சிங்கப்பூர் (4), மலேசியா (3), நேபாளம் (1), பிரான்ஸ் (3), ஆஸ்திரேலியா (4), இலங்கை (1) ஆகிய நாடுகளிலும் பரவியது கண்டறியப்பட்டது. ஆனால், பல்வேறு மருத்துவ வசதிகளை மேற்கொண்ட போதிலும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியவில்லை என சீன அரசு கைவிரித்து விட்டது.

இந்நிலையில், ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்பெர்க் நகரை சேர்ந்த 33 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும், அவர் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இவருடன் தொடர்பில் இருந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதால், அவர்கள் முனிச் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சீனாவின் வுஹான் நகரில் இருந்து கடந்த 22ம் தேதி டொரொன்டோ நகருக்கு திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தனிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக டொராண்டோ பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : China ,Germany ,Canada , சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்..ஜெர்மனி, கனடா நாடுகளுக்கும் பரவியது: உலக முழுவதும் பரவும் அபாயம்!
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...