சபரிமலையில் பெண்கள் தரிசன வழக்குகளை 10 நாட்களுக்கு மேல் விசாரிக்க மாட்டோம்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: ‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மொத்தம் 10 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தப்படும்,’ என உச்ச திமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 2018ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, முதலாவதாக வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் பின்னர் 9 நீதிபதிகள் அமர்வுக்கும் மாற்றி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், நாகேஸ்வரராவ், எம்.எம்.சந்தானகவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான விசாரணையின் போது என்ன மாதிரியான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிமன்ற தலைமை பதிவாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் எனக்கூறி வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

Advertising
Advertising

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்னிலையில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா நேற்று ஒரு கோரிக்கையை வைத்தார். அதில் அவர், ‘சபரிமலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது வாதங்களை எவ்வாறு முன்வைக்க வேண்டும் என மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோர் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் முந்தைய விசாரணையின் போது தெரிவித்திருந்தது. ஆனால், வழக்கறிஞர்களுக்கு இடையே அதனை ஏற்படுத்த முடியவில்லை,’ என்று தெரிவித்தார். இதையடுத்து, தலைமை நீதிபதி கூறும்போது, “அதனை நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். எங்களை பொருத்தமட்டில் இந்த வழக்கை 10 நாட்களுக்கு மேல் விசாரிக்க மாட்டோம். அதில், நீதிமன்றம் தெளிவாக உள்ளது. அதனால், சரியான வாதங்களை முன்வைப்பது என்பது வழக்கறிஞர்களின் வேலை மட்டுமே,’’ என்றார். சபரிமலை வழக்கு சமீபத்தில் மூன்று வாரம் ஒத்திவைக்கப்பட்டது. அதில் தற்போது இரண்டு வாரங்கள் முடிந்துள்ளதால், அடுத்த ஒரு வாரத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 10 நாட்களுக்குள் அனைத்து வாதங்களும் முடிக்கப்படும் என தெரிகிறது.

Related Stories: