மணப்பெண்களுக்கு மேக்கப் போடுங்க ஆசிரியர்களுக்கு உபி அரசு அவமரியாதை

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அமைச்சரின் தொகுதியில் நடந்த அரசின் இலவச திருமண விழாவில், மணப்பெண்களுக்கு மேக்கப் போட ஆசிரியர்களை நியமித்தது பரபரப்பு ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில், அமைச்சர் சதீஷ் திவேதியின் தொகுதியில் நேற்று முன்தினம் அம்மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் இலவச திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக திருமண விழாவில் மணப்பெண்களுக்கான மேக்கப் போட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்ட கல்வித்துறையால் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியபின், அது மாலைக்குள் திரும்பப் பெறப்பட்டது. அந்த உத்தரவில், ‘முதல்வரின் திருமணத் திட்டத்தின் கீழ், மாவட்ட அடிப்படை கல்வி அலுவலக மைதானத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, பின்வரும் ஆசிரியர்களுக்கு மணப்பெண்களின் ஒப்பனை செய்யும் கடமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்காக, 20 உதவி ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு விழா நடைபெறும் இடத்தை அடைய வேண்டும்’ என்று தொகுதி கல்வி அதிகாரி துருவ் பிரசாத் வெளியிட்டார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி சூர்யகாந்த் திரிபாதி பிறப்பித்த மற்றொரு உத்தரவில், ‘இந்த உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முந்தைய உத்தரவை பிறப்பித்த தொகுதி கல்வி அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு திருமண ஒப்பனை பணியை ஒதுக்கீடு செய்ததை மன்னிக்க முடியாதது என்று, ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தனர்.

Related Stories: