தங்க முலாம் பூசிய கலசம் : கோபுரத்தில் பொருத்தும் பணி: சிறப்பு பூஜையுடன் நாளை நடக்கிறது

தஞ்சை:தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கலசத்துக்கு தங்க முலாம் பூசும் பணி நிறைவடைந்தது. சிறப்பு பூஜையுடன் நாளை மீண்டும் கோபுரத்தில் கலசம் பொருத்தப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. இதையொட்டி கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலில் 216 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள விமான கோபுரத்தை கண்டு உலகமே வியக்கிறது. இதன் உச்சியில் 12 அடி உயர கலசம் பொருத்தப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவையொட்டி, கலசத்தில் திருப்பணி செய்யும் வகையில் கடந்த 5ம் தேதி கீழே இறக்கப்பட்டது.

இந்த கலசம் 8 பாகங்களாக இருந்தது. இதில் 3 பெரிய பாகங்கள், 5 சிறிய பாகங்கள் உள்ளன. இதையடுத்து கலசத்துக்கு தங்க முலாம் பூசும் பணி கடந்த 5ம் தேதி முதல் நடந்தது. இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து கலசத்தின் தன்மை, மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கல்பாக்கம் இந்திராகாந்தி அணுஆய்வு மையத்தின் கதிரியக்க பிரிவு இயக்குநர் வெங்கட்ராமன் தலைமையில் மேனகா உள்ளிட்டோர் கொண்ட குழுவினரும், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக உலோகவியல் துறை பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் குழுவினரும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதைதொடர்ந்து நாளை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் கோபுரத்தில் கலசம் பொருத்தப்படுகிறது.

Related Stories: