தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு உறுதி

மதுரை: தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என ஐகோர்ட் கிளையில் அரசு உறுதியளித்துள்ளது. ராமநாதபுரம், மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தஞ்சை பெரிய கோயிலில் பிப். 5ல் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதேபோல் தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன், கரூர் வக்கீல் தமிழ் ராஜேந்திரன், தமிழ்தேச பொதுவுடமை கட்சித்தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் சார்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மதுரையைச் சேர்ந்த வக்கீல் சரவணன், ‘‘தொல்லியல் துறை அனுமதியின்றி குடமுழுக்கு நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என்றும், சென்னையை சேர்ந்த ரமேஷ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழா நடத்தக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. தஞ்சை பெரிய கோயில் தேவஸ்தான வக்கீல் சந்திரசேகர் ஆஜராகி, ‘‘குடமுழுக்கு விழாவிற்கு 15 நிபந்தனைகளுடன் தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே தற்காலிக பந்தல் அமைக்க வேண்டும். தேவையான தீத்தடுப்பு கருவிகள் பொருத்த வேண்டும். கோயில் வளாகத்திற்குள் பிரசாதம் உள்ளிட்ட எந்தவிதமான பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது. ஜெனரேட்டர் உள்ளிட்ட கனரக பொருட்கள் எதுவும் வளாகத்திற்குள் இருக்கக்கூடாது. போதுமான பாதுகாப்பு இருக்க வேண்டும். கட்டிட அமைப்பில் எந்தவிதமான அலங்கார பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளது. இவை பின்பற்றப்படும். யாக குண்டங்கள் அனைத்தும் கோயிலுக்கு வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

அறநிலையத்துறை வக்கீல் சண்முகநாதன், ‘‘1980 மற்றும் 1997ல் குடமுழுக்கு விழா நடந்தது. அதைப் பின்பற்றி பிப். 5ல் குடமுழுக்கு நடக்கிறது. கடந்த 1ம் தேதி முதல் யாகசாலை நடந்து வருகிறது. திருமுறை பாராயணம், பன்னிரு திருமுறை, அபிராமி அந்தாதி, திருப்புகழ் உள்ளிட்டவை வாசிக்கப்படும்.  ஆகம விதிப்படி, தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்படும். ஆகம விதிகளைப் பின்பற்றி வழிபாடு மற்றும் விழாக்கள் நடத்தப்படுகிறது.  தமிழில் மட்டுமே நடத்த வேண்டும் என்பதற்கு மனுதாரர் தரப்பில் போதுமான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. முதலாம் ராஜராஜசோழன் தமிழ் திருமுறைகள் ஓதுவதற்காக 2 ஓதுவார்களை நியமித்துள்ளார். தற்போதும் கூட 2 ஓதுவார் மூர்த்திகள் பணியில் உள்ளனர். குடமுழுக்கு விழாவில் 80 ஓதுவார்கள் ஈடுபட்டுள்ளனர். 1997ல் எதிர்பாராதவிதமாகத்தான் தீவிபத்து நடந்தது. சமஸ்கிருதத்தில் நடத்தப்பட்டதால் தீவிபத்து ஏற்பட்டது என்பது கற்பனையானது. தமிழை புறக்கணித்து எதுவும் நடக்கவில்லை.

தமிழ் மற்றும் சமஸ்கிருதத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குடமுழுக்கு விழா அழைப்பிதழ் கூட முழுக்க தமிழிலேயே அச்சிடப்பட்டுள்ளது. பெரிய ேகாயில் என குறிப்பிடாமல் தமிழ் முறைப்படி ராசராசேசுரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார். மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, ‘‘குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பங்கேற்கும் வகையில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது. அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்க செய்ய வேண்டும். தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘தொல்லியல் துறை அனுமதி கிடைத்துள்ளதால் அதுதொடர்பான மனு முடிக்கப்படுகிறது. குடமுழுக்கு விழா தொடர்பாக தமிழக அரசு மற்றும் தேவஸ்தானம் சார்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.


Tags : Tamilnadu Government ,Tamilnadu Temple ,Sanskrit Tamilnadu , Thanjai Periya Temple, Tamil, Sanskrit, Kudumbullukku, Icort Branch, Government of Tamil Nadu
× RELATED தமிழக அரசு சிஏஏவுக்கு எதிராக...