ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து டெல்டாவில் திமுக ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்

நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை மாவட்டங்களில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்  பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மக்களிடம் இருந்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டியதில்லை. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் திட்டங்களை நிறைவேற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.  இந்த முடிவால் டெல்டா மக்கள் கொதிப்படைந்து உள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் உள்ள 187 கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள்  பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்தை கைவிடக்கோரி 28ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,  புதுக்கோட்டை ஆகிய மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவித்திருந்தார். அதன்படி டெல்டா மாவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகை: நாகை அவுரித்திடலில் நடந்த  ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.  திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தஞ்சை:  தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திலகர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ., வடக்கு  மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஹைட்ரோகார்பன் போராட்டக் குழுவினர்  கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய  நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற  வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க  வேண்டும்.  மத்திய அரசே, மோடி அரசே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்காதே, விவசாயிகள் விரோத பாஜ அரசு,  அதிமுக அரசு ஆகியவற்றை கண்டிக்கிறோம் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர்.

ரகுபதி எம்எல்ஏ மயக்கம்

புதுக்கோட்டை திலகர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி எம்எல்ஏ கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டம் முடிந்து மேடையை விட்டு ரகுபதி எம்எல்ஏ கீழே இறங்கும்போது, அருகில் இருந்தவர்களிடம் தனக்கு மயக்கம் வருவதாக கூறினார். இதையடுத்து நிர்வாகிகள் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று, காரில் அமரவைத்தனர். பின்னர் அவர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories: