×

குரூப் 4 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரிக்க முறையீடு: மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்தாண்டு நடந்த குரூப் 4 போட்டித்தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குரூப் 1 மற்றும் 2 தேர்வுகளிலும், காவலர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் நேற்று காலை வழக்கம்போல் வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அப்போது வக்கீல் கமுதி நீலமேகம் ஆஜராகி, ‘‘குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வக்கீல் முகமது ரஸ்வி பெயரில் மனு செய்கிறோம். இதை உடனடியாக அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும். தொழில்நுட்பரீதியாக மோசடி நடந்துள்ளது.

அழியும் மை கொண்ட பேனாவில் தேர்வு எழுதி, வாகனத்தில் கொண்டு செல்லப்படும்போது இடையில் வினாத்தாள் திருத்தப்பட்டுள்ளது. இது பெரும் மோசடியாகும். உண்மையாக படித்து நேர்மையாக தேர்வு எழுதுபவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. முறைகேடாக தகுதி இல்லாத நபர்கள் தேர்வாகின்றனர். டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், போலீசார், வருவாய்த்துறை உள்ளிட்ட பலருக்கும் இதில் பங்கு இருக்கலாம். இந்த வழக்கை தமிழக அரசின் சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் விசாரணை முறையாக நடக்காது. பலர் தப்பிக்கக் கூடும்.  போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை கண்காணிக்க தன்னிச்சையான அமைப்பை உருவாக்கவும், அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளோம்’’ என்றார். நீதிபதிகள், ‘‘இந்த முறைகேடு குறித்து முறையாக மனு தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்றனர். இதையடுத்து மனுவாக தாக்கல் செய்யப்பட்டது

Tags : CBI ,Selection Scandal ,Group 4 , Group 4 selection scandal, CBI
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...