எட்டு வழிசாலை வழக்கில் மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு: உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நடக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. சென்னை - சேலம் இடையில் உருவாக்க திட்டமிடப்பட்டு இருக்கும் 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதுதொடர்பான அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் அனைவரும் இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு நேற்று, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்காக முதலில் பட்டியலிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டு விட்டது.  இதையடுத்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதி ரமணா அமர்வின் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீதிமன்றம் நடந்து கொள்ள முடியாது. வழக்கு மீண்டும் எப்போது பட்டியலிடப்படுகிறதோ அப்போது தான் விசாரிக்க முடியும் எனக்கூறி மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

Related Stories: