டெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததற்காக ஐஏஎஸ் அதிகாரியை மாற்றுவதா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: டெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததற்காக ஐஏஎஸ் அதிகாரியை மாற்றுவதா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு கண்ணாடி வலையமைப்பு நிறுவனத்தின் மூலம் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான உட்கட்டமைப்பை இணைக்கும் 2,441 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறைவேற்றப்படவிருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பான டெண்டர் முறைகேடுகள் குறித்து ஏற்கனவே ஒரு வாரப்பத்திரிகையில் விரிவாக செய்திகள் வெளிவந்தன.  உடனே நானே ஒரு அறிக்கை வெளியிட்டேன். “நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பாதுகாத்திட தலைமைச் செயலாளர் முன்வர வேண்டும்” எனவும், “ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி விருப்ப ஓய்வில் செல்லும் அளவிற்கு அந்த டெண்டரில் நடைபெற்றுள்ள மர்மம் என்ன? யாரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது?”

என்று கேள்வி எழுப்பி, முதல்வரே ஒரு விளக்கமான அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தி இருந்தேன். இவ்வளவுக்குப் பிறகும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ இதுகுறித்த எந்த விளக்கத்தையும் தரவில்லை.

இந்நிலையில் நேற்றைய தினம் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநரும் மாற்றப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ) இருந்து நவம்பர் 2019ல் ஐ.ஏ.எஸ். நிலைக்கு உயர்த்தப்பட்ட ஜூனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான டி.ரவிச்சந்திரன் தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏன் இந்த “அதிகாரிகள் மாறுதல்” திருவிளையாடல்களை அமைச்சரும், முதல்வரும் கூட்டணி அமைத்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்? 2400 கோடி ரூபாய் மதிப்புள்ள மிக முக்கியமான பாரத் நெட் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்த அரசில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாருமே கிடைக்கவில்லையா? மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை-அதிமுக அரசின் ஊழலுக்கு ஒத்துவராமல் ஒதுங்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை எல்லாம் “டம்மி” பதவிகளுக்கு மாற்றி, அரசு நிர்வாகத்தை அடியோடு சீர்குலைத்துத் தரைமட்டமாக்க தலைமைச் செயலாளர் எப்படி அனுமதிக்கிறார்?  நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தங்கள் விருப்பம் போல் அமைச்சர்களும், முதலமைச்சரும் பந்தாடுவதற்கும், ஆட்டிப் படைப்பதற்கும் எப்படி இடமளிக்கிறார்? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நேர்ந்துள்ள இந்த அநீதி-அதிமுக ஆட்சியில் தொடரும் அநீதி குறித்து தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் முணுமுணுப்பே காட்டாமல் முடங்கிப் போனது ஏன்? அச்சுறுத்தல் காரணமா?.

 உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவும் இத்திட்டத்தை அதிமுக அரசு ஊழல் மயமாக்கி விடும் என்பதற்கான ஆதாரங்களாக இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. ஆகவே இத்திட்டத்தின் டெண்டர், அது தொடர்பான கோப்புகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் உடனடியாக கைப்பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு விசாரணையில், “முதற்கட்ட விசாரணையிலேயே விரிவான விசாரணை நடத்தும் அதிகாரம் எங்களுக்கு  இருக்கிறது” என்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே அறிவித்திருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, இந்த பாரத் நெட் திட்டம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணையையாவது செய்திட முன்வர வேண்டும் என்றும், ஊழல் நடப்பதற்கு முன்பே தடுப்பதும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை மற்றும் விழிப்புணர்வு ஆணையத்தின் கடமை தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: