5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: ஏழை, அடித்தட்டு, நடுத்தர மக்களை பள்ளிக்கு நுழைய விடாமல் வெளியேற்றும் சதிச்செயல்: திமுக கடும் கண்டனம்

சென்னை: “5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு என்பது ஏழை, அடித்தட்டு,  நடுத்தர மக்களை கல்வி சாலைக்குள் நுழைய விடாமல் வெளியேற்றும் சதிச்செயல்” என்று திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள்  இப்போது பள்ளி மாணவ, மாணவியரின் தொடக்கக் கல்விக் கனவையும் சிதைக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்கள். மத்திய அரசு அமல்படுத்த துடித்து, மாநில அரசின் ஒப்புதலோடு அமலாக இருக்கும் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறை என்பது ஏழை, அடித்தட்டு, நடுத்தர மக்களை கல்விச் சாலைக்குள் நுழைய விடாமலும், நுழைந்தவர்களையும் திட்டமிட்டு வெளியேற்றும் சதிச்செயலின் வெளிப்பாடு என்பதை திமுக தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதும், ‘தமிழகத்துக்கு மட்டும் மூன்று ஆண்டுகள் விலக்கு பெற்றுள்ளோம்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் சொன்னார். அதிமுக அரசின் அரசியல் நாடகங்கள் பார்த்துப் பழகியவை. ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் நடத்துவது மாணவர்களின் வாழ்க்கையோடு நடக்கிறது. இதனை அனுமதிக்க முடியாது. இதனை வேடிக்கை பார்க்க முடியாது. இதைப் போன்ற மக்கள் விரோதம் எதுவும் இருக்க முடியாது. தமிழின விரோதம் எதுவும் இருக்க முடியாது. பல நூறு ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட இச்சமூகம், இந்த நூற்றாண்டில் தான் சமூகநீதி, பல்வேறு சலுகைகள் மூலமாக பள்ளி, கல்லூரிகளுக்குள் நுழைந்தார்கள்.

அவர்களை மீண்டும் கல்விக்கூடத்துக்கு வெளியில் நிறுத்தும் மனுவாட்சிக்கு வழிவகுக்கும் இந்தக் கல்வித்துறை நடவடிக்கைகளை அனைவரும் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். தமிழக அரசு 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை இந்த ஆண்டு நடத்தவும் கூடாது. இனி எந்த ஆண்டும் தொடங்கவும் கூடாது என்ற எங்கள் தலைவர் நிலைப்பாட்டை, அதிமுக அரசு ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: