சென்னையில் 207 நீர்நிலை சீரமைப்பு பணி முடிந்தால் 1 டிஎம்சி நீரை சேகரிக்க முடியும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாநில அளவிலான பணி ஆய்வுக்கூட்டம் நேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை மாநகராட்சி  ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடந்தது. இதில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.  இதனை தொடர்ந்து பேரிடர் காலங்களில் மரங்களை அகற்ற ₹39.50 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள டெலிஹாலண்டர் இயந்திரம், 5.20 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள கழிவுநீர் அகற்றும் நவீன சுப்பர் சக்கர் இயந்திரம், தெருவோரங்களில் வசிப்பவர்கள் மீட்பதற்காக 50 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள மீட்பு வாகனம் ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டி :  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகம் முன்னேறி இந்திய அளவில் 8 வது இடத்திலும், அம்ரூத் திட்டத்தில் 11வது இடத்திலும் உள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் முழு கவனத்துடன் செயல்படுத்தபட்டு வருகிறது. சென்னையில் 210 நீர்நிலைகள் புனரமைப்பு பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 73 நீர்நிலைகளில் பணிகள் நிறைவடைந்துள்ளது. 137 நீர்நிலைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.   ஆறு மாதங்களுக்குள்  இந்த பணிகள் நிறைவு பெறும். இதன்பிறகு கூடுதலாக 1 டிஎம்சி தண்ணீர் சேகரிக்க முடியும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: