170வது நாளாக 100 அடிக்கு மேல் நீடிக்கும் நீர்மட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நேற்று மாலை 6மணி முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 170 வது நாளாக 100 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் இருந்து வருகிறது. மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகப்பட்டினம் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை 230 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். முப்போக சாகுபடிக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசனப்பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து பாசனத்தேவை குறையும். கடந்த நீர் பாசன ஆண்டில் ஜூன் 12ல் மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாததால் இரண்டு மாதம் தாமதமாக ஆகஸ்ட் 13ம்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை வரை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 151 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.49 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 310 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 74.89 டி.எம்.சி. 2011க்கு பிறகு நடப்பு ஆண்டில்தான் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்படும் போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு மேலே உள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் பாசனத்திற்கு நிறுத்தப்படும் போது 1947ல் நீர் மட்டம் அதிகபட்சமாக 114.5 அடியாக இருந்துள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக 1946ல் நீர் மட்டம் 8.9 அடியாக இருந்துள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 170 நாட்கள் 100 அடிக்கு குறையாமல் இருந்துள்ளது. தற்போது 107 அடி இருப்பதால் ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: