ஊத்தங்கரை அருகே அரசு விடுதியில் மட்டையான சமையலர் மாணவர்களே சமைத்த அவலம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு விடுதியில் குடிபோதையில் சமையலர் படுத்துக்கொண்டதால், மாணவர்களே சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி அருகில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்காக அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் வார்டனாக சரவணன்(36) என்பவரும், சமையலராக சூளகிரியை சேர்ந்த முனிராஜ்(42) மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அமிர்தலிங்கம் விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றுவிட்டதால், பணியில் இருந்த முனிராஜ் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்காமல், அதிகளவு மது குடித்துவிட்டு போதையில் படுத்துக்கொண்டார். இதையடுத்து, மதியம் விடுதிக்கு சாப்பிட வந்த மாணவர்கள், மதிய உணவு இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர்.  பசியால் வாடிய மாணவர்கள் தாங்களாகவே மதிய உணவை சமைத்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு தாமதமாக சென்றனர். இதை தொடர்ந்து, மாற்று சமையலர் அமிர்தலிங்கம் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு நேற்று உணவு சமைக்கப்பட்டு, வழங்கப்பட்டது. உணவு சமைக்காமல் குடிபோதையில் இருந்ததாக முனிராஜ் மீது நேற்று புகார் எழுந்த நிலையில், அவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

Related Stories: