அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 29.5 கோடியில் புற்றுநோய் குணப்படுத்தும் நவீன கருவி : முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை:  புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய மூன்று வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. புற்றுநோயை குணமாக்குவதில் கதிர் வீச்சு சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சிகிச்சைக்கு நவீன கருவியான நேரியல் முடுக்கி கருவி மிகவும் அவசியம். அதனை கருத்தில் கொண்டு, சென்னை, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 29 கோடியே 50 லட்சம் செலவிலும், சென்னை, அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் 22 கோடியே 21 லட்சம் செலவிலும், கதிர் வீச்சு புற்றுநோயியல் துறை வளாகங்கள் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி ( லீனியர் ஆக்ஸிலேட்டர்) கருவிகளை நிறுவியுள்ளது. இந்த புதிய கருவிகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

Advertising
Advertising

இந்த புதிய வளாகத்தில், புற்றுநோய்க்கான புறநோயாளிகள் பிரிவு, கதிர்வீச்சு புற்றுநோய் கருவிகளான   நேரியல் முடுக்கி, சி.டி. சிமுலேட்டர், கதிர்வீச்சு கருவி, அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள மருத்துவ கருவிகள் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தில் முதன்மையான கருவியாகும். இந்த மருத்துவ கருவிகள், கதிர்வீச்சை உருவாக்கி, அதனை புற்றுநோய் தாக்கப்பட்ட உடல் திசுக்களின் மீது மட்டும் பாய்ச்சி, புற்றுநோய் கிருமிகளை முழுவதுமாக அகற்றி, நோயை குணப்படுத்த பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட உடல் திசுக்களை தவிர சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு இந்த கருவி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: