அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாறாது : அமைச்சர் உறுதி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டால் கூட அதன் பெயர் மாறாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 சென்னை கிண்டியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, கல்வி சார்ந்து ஒரு பல்கலையும், நிர்வாகம் சார்ந்து ஒரு பல்கலையும் என பிரித்து நிர்வாகம் செய்யும் அந்த முடிவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதன் பேரில் முடிவு எடுத்து செயல்படுத்த மூத்த அமைச்சர்கள் 5 பேர், 3 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு அமைத்தது. அதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் சார்பில் கடந்த 6ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில் அதன் இரண்டாவது கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: அண்ணா பல்கலை உலக அளவில் பாராட்டப்படும் நிலையில் சீர்மிகு பல்கலைக்கழகமாக மாறும் போது கல்விச் சூழல் இன்னும் அதிகரிக்கும். அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படும் போது இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக கலந்தாலோசித்த பிறகு, உயர்மட்டக் குழு தனியாக  ஒரு துணைக் குழுவை தற்போது அமைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு அளிக்கும் நிதியை எப்படி பெறுவது, எந்த வகையில் நிதி கிடைக்கும், மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மற்ற பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து இந்த துணைக்குழு அறிக்கை தாக்கல் செய்யும். அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டால் அதன் பெயர் எந்த காரணம் கொண்டும் மாறாது. உலக அளவில் இந்த பல்கலைக்கழகம் நல்ல பெயர் பெற்று நீண்ட காலமாக இயங்கி வருகிறது. அதனால் அந்த பெயர் மாறாது. அது எப்போதும் போலவே அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Stories: