×

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து இன்னொரு தேர்வு பட்டியல் ரத்து

* மோட்டார் வாகன ஆய்வாளர் நியமன முறைக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 33 விண்ணப்பதாரர்களை  மட்டும் நேர்முக தேர்வுக்கு அழைத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட பட்டியலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு நடந்துள்ள நிலையில் இன்னொரு தேர்வு பட்டியல் ரத்தானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளம்பரம் வெளியிட்டது. இப்பணிக்கு எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 2,176 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 785 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கு, 2018 ஆகஸ்ட் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.

விதிகளின்படி, ஒரு பதவிக்கு இரு விண்ணப்பதாரர்கள் என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்களை அழைக்காமல், 33 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதை எதிர்த்து செந்தில்நாதன் உள்ளிட்ட சுமார் 300 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், அங்கீகரிக்கப்பட்ட பணிமனையில் அனுபவச் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிகளில் திடீர் மாற்றம் கொண்டு வந்து, அந்த பணிமனையில் பணியாளர் வருகைப் பதிவு இல்லை, சேமநல நிதி இல்லை என்பன உள்ளிட்ட காரணங்களைக் கூறி, தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த உத்தரவு வருமாறு:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களைப் போல, நேர்முகத்தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை. . இதையடுத்து, புதிய விதிகளை வகுப்பதாகவும், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடத்தப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. புதிய விதிகளின்படி, எழுத்து தேர்வில் பங்கேற்ற 1,328 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை மோட்டார் வாகன பராமரிப்பு துறை  சரிபார்க்க வேண்டும். இந்த பணிகளை நான்கு வாரங்களில் முடித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும். மோட்டார் வாகன பராமரிப்புத் துறை அறிக்கையைப் பெற்ற நான்கு வாரங்களில், தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, இறுதி பட்டியலை தயாரித்து இணைய தளத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை குறித்து பலத்த சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. இது வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : checklist cancellation ,selection scandal ,DNBSC Group 4 ,TNPSC Group 4 , Another checklist cancellation , TNPSC Group 4 selection scandal
× RELATED இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள்;...