பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம்

சென்னை:  பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 30ம் தேதி (நாளை) டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தினர் கூறினர். இதுதொடர்பாக தமிழக டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 17 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விற்பனையாளர்கள் மீது ஒருதலைபட்சமாக எடுக்கப்படும் பழிவாங்கும் நடவடிக்கை, அபராதம் விதிப்பது, பணியிடமாற்றம் செய்வது ஆகியவற்றை கைவிட வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கழிவறை அமைக்க வேண்டும்.

பணியின்போது உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் இழப்பீடு, வாரிசுதாரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசு, கொள்கைப்படி டாஸ்மாக் கடைகளை மூடும்பட்சத்தில் ஊழியர்களுக்கு, அரசுத்துறையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (ஜன.30ம் தேதி) டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். தமிழக மக்களை மதுவுக்கு அடிமையாக்குவது எங்கள் நோக்கமல்ல. எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories: