வரும் பிப்ரவரி 12ம் தேதி வரை சென்னையில் பேரணி, போராட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை

சென்னை: சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் பிப்ரவரி 12ம் தேதி 6 மணி வரை பேரணி, போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே .விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணி நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் பிப்ரவரி 12ம் தேதி 6 மணி வரை சென்னையில் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் உட்பட எந்த இடங்களிலும் தமிழ்நாடு சிட்டி போலீஸ் ஆக்ட் 41ன்படி பேரணி, பொதுக்கூட்டம், மனித சங்கிலி, போராட்டம், சாலைமறியல் போராட்டங்கள் நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தடை விதித்துள்ளார். அப்படி தவிர்க்க முடியாத நிலையில் நிகழ்ச்சிகள் யாரேனும் நடத்த வேண்டும் என்றால் நிகழ்ச்சி நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு காவல் துறையில் கடிதம் வழங்க வேண்டும். இந்த உத்தரவை மீறி யாரேனும் போராட்டம், பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தினால் அவர்கள் மீது சிட்டி போலீஸ் ஆக்ட் 41ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: